யாருக்கும் வெட்கமில்லை!

ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிப் போலீசாரின் கூண்டு வண்டியில் செல்லும் அரசியல்வாதிகள் பல்லெல்லாம் பரக்கக் காட்டும் வெட்கங்கெட்ட சிரிப்பு.....

பணங்கொழுத்த அண்ணச்சிகள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏதுமறியாத பாப்ப்பாவைப் போலப் பாவனை காட்டியபடி உதட்டில் தவழவிடுகிற ரெடிமேட் புன்னகை.......

போலி வேஷதாரிப் பிரேமானந்தாக்களின் முற்றும் துறந்தது போன்ற ஞானச்(?!)சிரிப்பு....

இவையெல்லாம் நாம் அன்றாடம் பார்த்துப் பழகி.....மரத்தும்...மறந்தும் போய் விட்டவைதான்.

இப்பொழுது சில நாட்களாக ஒரு ’அதிகாரியின் ஆணவச் சிரிப்பை' (நன்றி;கலைவாணர் என்.எஸ்.கே.) அன்றாடம் தரிசிக்கும் அரும்பெரும் பேறு ...நாளிதழ்களாலும்,பிற ஊடகங்களாலும் நமக்கு வாய்த்துக் கொண்டிருக்கிறது.

மிருகத்தை விடக் கீழான அந்த மனிதர் எப்படி வேண்டுமானாலும் ...எதற்காக வேண்டுமானாலும் சிரித்துத் தொலைத்துவிட்டுப் போகட்டும்.அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

1.ஒரு வேளை தன் தரப்பு வாதங்களைத் தன் சார்பாக எடுத்து வைக்கிற வக்கீலாகத் தன் மனைவியே வாய்த்திருப்பதில்(கல்லானாலும் கணவன் என்பது இப்படியா நிரூபணமாக வேண்டும்!?)ஏற்பட்ட எக்களிப்பாக அது இருக்கலாம்.
2.ருச்சிகா என்ற இளம் தளிர் ஒன்றை அரும்பிலேயே கசக்கிப்போட்ட பிறகும் குறைந்த பட்ச தண்டனையோடு தான் தப்பிக்க முடிந்ததில் விளைந்த கொக்கரிப்பாகவும் அது இருக்கலாம்.

இவற்றுள் காரணம் எதுவாக இருந்தாலும்,
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரணங்கள் அந்தச் சிரிப்புக்குள் புதைந்து கிடந்தாலும் நமக்கு அக்கறையில்லை.ஆனால் இன்றைய செய்தித் தாளில்....THE TIMES OF INDIA வின் முதல் பக்கத்தில்
''I learnt from the greatest son of India Jawaharlal Nehru to smile when you are in adversity''
என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருப்பதுதான் நம்மை மிகவும் கலவரப்படுத்துகிறது.
அடிப்படை அறம் சார்ந்த விஷயங்களை இவ்வளவு இலகுவாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் தனது நாணமற்ற சிரிப்புக்கு நேருவைத் துணைக்கழைக்கும் இவது நேர்மையின்மை கண்டனத்துக்குரியது;இந்தியக் குடியரசின் உருவாக்கத்தில் அச்சாணியாக விளங்கிய பெருமகனைத் தன் சிறுமதியால் விளைந்த கேவலத்தோடு ஒப்பிடும் அவரது வார்த்தைகள் இந்திய நாட்டின் இறையாண்மையையே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக நேருவின் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்படாமலில்லை;ஆனாலும் மழலைப் பிஞ்சுகளின் மீது....எதிர்காலத்தை உருவாக்கப் போகும் சிற்பிகளாகிய சிறுவர்களின் மீது அவர் கொண்டிருந்த ஆத்மார்த்த நேசம் உன்னதமானது; சொல்லில் அடங்காதது.
வளர வேண்டிய இளம் மொட்டான ருச்சிகாவின் வருங்காலமே மண் மூடிப் போகுமாறு செய்த மனித மிருகம் சொல்கிறது....சிக்கலில் சிரிக்கும் பண்பை....நேருவிடமிருந்து கற்றேன் என்று!!இதை விடச் சிறந்த நகை முரண் irony வேறு என்னவாகத்தான் இருந்துவிட முடியும்?

ஒருக்கால் அந்த நபருக்குத் தமிழும்,வள்ளுவரும் தெரிந்திருந்தால்
‘’இடுக்கண் வருங்கால் நகுக’’வை வள்ளுவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்று கூடச் சொல்லியிருக்கலாம்!
தமிழும் வள்ளுவரும் நல்ல காலமாய்த் தப்பியாயிற்று!

வெட்கமில்லை...வெட்கமில்லை...இங்கே யாருக்கும் வெட்கமில்லை!

                                                                                                                 --எம்.ஏ.சுசீலா --