பிளஸ் 1, 2 வகுப்புகளில் 'கிரேடிங்' முறை! அரசு தீவிர ஆலோசனை

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில், கிரேடிங் முறையை கொண்டு வருவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் நடைபெற்ற, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோன்று கல்லூரி இளங்கலை வகுப்பில்,சேர பல்வேறு பாடப்பிரிவுகளில், "சாட்' (ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்) போன்று தேசியளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
 

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கிரேடிங் முறையை அமல்படுத்துவது குறித்து, புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து, அடுத்த சில மாதங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இறுதி முடிவெடுக்கும்.
 அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில், மேனிலைக் கல்வியில், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கிலத்தை மேம்படுத்தும் வகையில், செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி பரிந்துரைக்குமாறு, கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்திடம் (என்.யு.இ.பி.ஏ.,), மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கேட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

                                                                                                                                  --தினமலர்--