அமைதிக்கான நோபல் பரிசு பட்டியலில் 'இன்டர்நெட்' பரிந்துரை

2010 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலில் 'இன்டர்நெட்' டும் இடம் பெற்றுள்ளது.

பிரபல வைர்ட் - 'Wired' என்ற பத்திரிகையின் இத்தாலிப் பதி்ப்புதான், 'இன்டர்நெட்' டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்தது.

தகவல் தொடர்பு வாயிலாக விவாதங்கள், பேச்சுவார்த்தை மற்றும் ஒருமித்த கருத்துக்களை எட்டுவதற்கு 'இன்டர்நெட்' மிகவும் உதவியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை அதற்கு அளிக்க வேண்டும் என்று அப்பத்திரிகை கூறியிருந்தது.

மேலும் தனது பரிந்துரைக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனது பத்திரிகையில் 'Wired Backs Internet for Nobel Peace Prize' என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்றையும் அது பிரசுரித்திருந்தது.

இந்த கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், இதன் பரிந்துரையைத் தொடர்ந்தே அமைதிக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் தற்போது 'இன்டர்நெட்' டும் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர 2010 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பட்டியலில், மேலும் 2 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த லியூ சியோபோ.இவர் சீன அரசால் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மனித ஆர்வலர்.

மற்றொருவர் ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ஸ்வெத்லானா கன்னுஷ்கினா ஆவார்.

வருகிற அக்டோபர் மாதம் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும்போது, அமைதிக்கான நோபல் பரிசை 'இண்டர்நெட்' வெல்லுமா என்பது தெரியும்.

                                                                                                                                          --வெப்துனியா--