நாக்பூர் டெஸ்ட் 2 வது நாள் : 558 ரன்களுக்கு தெ.ஆ. டிக்ளர்

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அபாரமாக ஆடி, 558 ரன்களுக்கு டிகளர் செய்தது.

நாக்பூரில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் காலிஸ் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோரின் அபார ஆட்டத்தினால், ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 113.2 ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங் வீசிய பந்தை ஓங்கி அடித்த காலிஸ், விஜய் முரளியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹஷிம் அம்லாவுடன், வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்து களமிறங்கினார்.

இந்த ஜோடி கணிசமான ரன்களை குவிக்க மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்ரிக்கா அணி, 126.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 393 ரன்களை குவித்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஹஷிம் அம்லா - வில்லியர்ஸ் இணை தொடர்ந்து ஆடி ரன்களை குவித்தது.

இந்நிலையில், சேவாக் பந்தில் சுப்ரமணியம் பத்ரிநாத்திடம் கேட்ச் கொடுத்து, 53 ரன்களுடன் வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து டுமினி, 9 ரன்களுடன் ஹர்பஜன் பந்திலும், ஜாகீர்கான் பந்தில் மார்க் பவுச்சர் 39 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் ஹஷிம் அம்லா அபாரமாக ஆடி 253 ரன்கள் குவித்து, ஆட்டமிழக்காமல் அணிக்கு வலு சேர்த்தார்.

இறுதியில் 176 ஆவது ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தை டிகளர் செய்வதாக அறிவித்தது தென் ஆப்ரிக்கா அணி.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீர் - வீரேந்திர சேவாக் இணை களமிறங்கியது.

தொடக்கம் முதல் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்த இந்த இணை, இன்றைய ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 25 ரன்களை எடுத்திருந்தது.

                                                                                                                                        --வெப்துனியா --