ருச்சிகா வழக்கு - ரத்ததோருக்கு கத்திக்குத்து

ருச்சிகா என்ற சிறுமி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் அரியானா மாநில முன்னாள் காவல்துறை தலைவர் ரத்தோரை மாணவன் ஒருவன் இன்று கத்தியால் குத்தினான்.

நீதிமன்ற வளாகத்தில் விசாரணை முடிந்து திரும்பிய ரத்தோரை பத்திரிகையாளர் மத்தியில் நின்று கொண்டிருந்த அந்த மாணவன் முகத்தில் கத்தியால் குத்தினான்.

அரியானா மாநில முன்னாள் காவல்துறை தலைவர் ரத்தோர். இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் ருச்சிகா என்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் ரத்தோருக்கு சமீபத்தில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடும் குற்றம் செய்த அவருக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் இன்று சண்டிகர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து அவர் திரும்பியபோது தேசிய வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த உத்சவ் சர்மா என்ற மாணவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் ரத்தோரின் முகத்தில் குத்தினான். அவரது முகத்திலிருந்து ரத்தும் பீரிட்டது. தன் முகத்தை கர்சீப்பால் மறைத்தபடி அவர் காருக்கு விரைந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அந்த மாணவனை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                                                                                                                                          --நிகழ்வுகள்--