சென்னை நகைக்கடையில் துளை போட்டு ரூ.4 கோடி நகைகள் கொள்ளை

சென்னை பூந்தமல்லி அருகே நகைக்கடை சுவரில் துளை போட்டு ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பஸ் நிலையம் அருகே விகேஷ் என்ற பெயரில் நகைக்கடை, அடகுக்கடை வைத்திருப்பவர் பர்சன் சந்த். ராஜஸ்தான் மாநிலம் பிப்பாட் சிட்டி பகுதியை சேர்ந்தவர். நகைக்கடையை பர்சன் சந்த் மகன்கள் தினேஷ், ரூபேஷ், விகேஷ் நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 9 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் அலார மணியை ஆன் செய்து விட்டு கடையை பூட்டினர். இன்று காலை 8.45 மணியளவில் வழக்கம்போல தினேஷ் கடையை திறந்து உள்ளே சென்றார். ஷோகேஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள், பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தந்தைக்கும் பூந்தமல்லி போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.

பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜூட் துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் அருள் சந்தோசமுத்து, இளங்கோ, சித்தார்த்ராய் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘தண்டர்’, குமணன்சாவடி வரை ஓடி சென்று திரும்பிவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

நகைக்கடை மற்றும் அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைகளை போலீசார் பார்வையிட்டனர். நகைக்கடையை ஒட்டி கரீம் என்பவருக்கு சொந்தமான ரியாஸ் டிம்பர் என்ற மரக்கடை உள்ளது. இதன் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே புகுந்துள்ளது. பின்னர் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு நகைக்கடை சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்துள்ளனர். முதலில் அலார மணிக்கான இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த அனைத்து நகைகளையும் மூட்டை, மூட்டையாக கட்டி அள்ளி சென்றுள்ளனர். விலை உயர்ந்த வெள்ளி பொருட்கள் மரக்கடையின் பின்புறம் சிதறி கிடந்தது. அவற்றை போலீசார் மீட்டனர்.

எந்நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை பற்றி கடை உரிமையாளர் பர்சன் சந்த் கண்ணீர்மல்க கூறியதாவது:

கடையில் 8.5 கிலோ தங்க நகை, 30 கிலோவுக்கும் அதிகமாக வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்பில் அடமான நகைகள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அனைத்தும் கொள்ளை போய்விட்டது. 13 ஆண்டுகளாக கடை நடத்துகிறேன். கடைக்கு பக்கத்தில்தான் கூட்டு குடும்பமாக வசிக்கிறேன். இந்த பகுதியில் இவ்வளவு பெரிய திருட்டு நடந்ததே இல்லை. ஜன நெருக்கடி அதிகம் உள்ள இடத்தில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எங்களது மொத்த உழைப்பும் ஒரே நாளில் வீண் போய் விட்டது.

இவ்வாறு பர்சன் சந்த் கூறினார்.

நகைக்கடையில் துளை போட்டு புகுந்து ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், அடமான நகைகள், ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கரையான்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நகைக்கடை சுவரில் துளை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னை புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம்கட்டளையில் 2 மாதம் முன்பு இதேபோல கொள்ளை நடந்தது. முகப்பேர் வாவின் சாலையில் கடந்த மாதம் கொள்ளை நடந்தது.

பக்கத்து கடை வழியாக புகுந்த கொள்ளையர்கள், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு திருடிச் சென்றனர். அதேபோல தற்போது கரையான்சாவடியில் கொள்ளை நடந்துள்ளது. முகப்பேரில் கைவரிசை காட்டிய கும்பலே தற்போதும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 
                                                                                                                          --நியூஇந்தியாநியூஸ்--