இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு : மேற்கு வங்க அரசு

கொல்கத்தா,​​ பிப்.8:​ மேற்கு வங்க மாநிலத்தில் இசுலாமியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ​ 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவுசெய்துள்ளது.​ இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை மாநில அரசு வெளியிட்டது.

இந்த இடஒதுக்கீடு மாநிலத்தில் கல்வி,​​ சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இசுலாமியர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ​(ஓ.பி.சி.)​ பிரிவின் கீழ் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் ​ தெரிவித்ததாவது:​ ​

சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ரங்கனாத் மிஷ்ரா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.​ இந்த விடயத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்பாராமல் விரைந்து செயலாற்ற இந்த அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.​ இதற்காக மாநிலத்தில் கல்வி,​​ சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இசுலாமியர்ளை கணக்கெடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே இங்கும் எஸ்.சி.,​​ எஸ்.டி.,​​ மற்றும் ஓ.பி.சி.,​​ பிரிவினருக்கு இடஒதுக்கீடு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது,​​ கணக்கெடுப்பிற்கு பிறகு சம்பந்தபட்ட இசுலாமியர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் ​(ஓ.பி.சி.)​ பிரிவின் கீழ் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.​ ​ ​

மதஅடிப்படையிலான இடஒதுக்கீடு அல்ல:​​ இந்த இடஓதுக்கீடு குறித்து இடதுசாரிகள் தலைவர் பிமன் போஸ் கூறுகையில்,​​ இந்த இடஒதுக்கீடு சமூக நீதியின் அடிப்படையில் சமூக மற்றும் ​ பொருளாதரத்தில் பின் தங்கியுள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு கொண்டுவரப்படுகிறது என்றார்.​ மேலும் மத அடிப்படையிலான ஒதுக்கீடு அல்ல இது என்றும் கூறினார்.

கொல்கத்தாவில் மாநகராட்சித் தேர்தல்கள் வரும் மே-ஜூன் மாதங்களில் ​ நடைபெறவிருக்கும் வேளையில் இத்தகைய இடஒதுக்கீடு அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

                                                                                                              தமிழ் மறவன்