இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது

கொழும்பு : இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். ராணுவ போலீசார் அவரை கைது செய்தனர்.இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாவது: பொன்சேகாவும், அவரின் ஊடக செயலர் செனகா டி சில்வாவும் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகரில் அவர்களின் அலுவலகத்தில் இருந்த போது கைதாகினர். அப்போது, "உங்கள் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ராணுவ போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என, அதிகாரி ஒருவர் பொன்சேகாவிடம் தெரிவித்தாக உதவியாளர் கூறினார்.