‘ஆ.. பீஸர்கள்’ சூட்கேஸ் வாங்க ரூ 5000 அலவன்ஸ்… என்ன கொடுமை !

அரசு அதிகாரிகள் சூட்கேஸ் வாங்க, ரூ 5000 அலவன்ஸ்!!

மக்கள் பணம் எப்படியெல்லாம் அரசாங்கத்தின் நிர்வாகச் செலவு என்ற பெயரில் தண்டமாக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ள இன்னும் ஒரு சான்று, அதிகாரிகளுக்கு அரசு அறிவித்துள்ள சூட்கேஸ் அலவன்ஸ் உயர்வு.

தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு வரை இந்தச் சலுகை பொருந்தும் என்று நேற்றைய அறிவிக்கையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்,​​ அதிகாரிகளுக்கு பல்வேறு படிகள்,​​ சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.​ அவற்றில்,​​ எழுதுபொருள்,​​ சூட்கேஸ் போன்ற பொருள்கள் வாங்குவதற்கான படிகளும் அடங்கும்.

அரசு அதிகாரி ஒருவருக்கு சூட்கேஸ் பெற்றுக் கொள்வற்கான தொகை ரூ.440 ஆக முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.​ இந்தத் தொகை இப்போது அதிகாரிகளின் தகுதி நிலைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

சார்பு,​​ ​ துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும்,​​ இணை,​​ கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.​ இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஒரு சார்புச் செயலர் அல்லது துணைச் செயலர் இன்றைக்கு வாங்கும் சம்பளம் ரூ 50 முதல் 80 ஆயிரம் வரை. இதல்லாது பல சில்லறைப் படிகள் (miscellaneous allowance) வேறு தரப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக வாங்கும் இந்த சம்பளமில்லாமல், சட்டவிரோதமாக வரும் கிம்பளம் பல லட்சங்கள்.. ஏன் கோடிகளையும் தாண்டும். எங்காவது ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். மற்றபடி இந்த செயலர் மட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் மக்கள் அறியாத ரகசியமல்ல. இந்த அரசு அதிகாரிகளின் கோரமான லஞ்சமுகம் மக்கள் நன்கு அறிந்த ஒன்றுதானே!

இத்தனை வருவாய் ஆதாரங்களைக் கொண்ட அதிகாரிகளுக்கு சூட்கேஸ் வாங்க தனி அலவன்ஸ் வேறு தர வேண்டுமா?

உண்மையில் எதற்காக இந்த அலவன்ஸ்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன…? அரசு நிர்வாகம் சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்… எதற்காகவும் கைநீட்டி விடாமல் அதிகாரிகள் உயர்ந்தபட்ச நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே?

நடைமுறையில் அப்படியா உள்ளது நிலைமை? சமத்துவபுரத்தில் இலவச வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்குவதற்கு ஒரு வீட்டுக்கு தலா ரூ 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை லஞ்சம் தரவேண்டும். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் முக ஸ்டாலின் திறந்து வைத்த சமத்துவபுர வீடுகளைப் பெற ஜாதி வித்தியாசமின்றி தலா ரூ 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது (என்ன ஒரு சமத்துவம்!). இதில் 30 சதவிகிதம் அந்தத் துறை அதிகாரிகளுக்கு என்று வெளிப்படையாகக் கூறியே வசூலித்துள்ளனர்…

இப்படியெல்லாம் ஏழைகளை வருத்தி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு ஒரு சூட்கேஸ்… அதை வாங்க ஒரு அலவன்ஸ்… வெளங்கீரும்!

                                                                                                                       --சாம் பிரபாகரன்--என்வழி--