
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் நடக்கிறது. 1,809 மையங்களில் நடக்கும் தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 4,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுவினர், அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு, கடந்த 4ம் தேதி துவங்கி, 24ம் தேதியுடன் முடிந்ததையடுத்து, முக்கியமான எழுத்துத்தேர்வு நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் 1,779 மையங்கள், புதுச்சேரியில் 30 மையங்கள் என, மொத்தம் 1,809 மையங்களில் பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன.தமிழகத்தில் 5,146 பள்ளிகளில் இருந்து, ஆறு லட்சத்து 77 ஆயிரத்து 99 மாணவர்களும், புதுச்சேரியில் 87 பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 588 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர்.தேர்வெழுதும் மொத்த மாணவர்களில் (6,89,687), மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 381 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 306 பேர் மாணவியர். மொத்த மாணவர்களில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 42 ஆயிரத்து 55 பேர் தேர்வெழுதுகின்றனர்.
நடப்பாண்டில் மாணவர்களை விட, மாணவியர் 44 ஆயிரத்து 925 பேர் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மாணவர்களில் 17 ஆயிரத்து 481 பேரும், மாணவியரில் 24 ஆயிரத்து 574 பேரும் அதிகம். புதுச்சேரியில் 5,787 மாணவர்களும், 6,801 மாணவியரும் தேர்வை எழுத உள்ளனர். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வு மூலம் 53 ஆயிரத்து 564 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.
தீவிர கண்காணிப்பு: தேர்வையொட்டி, 1,809 மையங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வில், சமூக அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே, "லீக்' ஆன சம்பவம் நடந்தது. தேனி அல்லிநகரத்தில் உள்ள ஒரு பள்ளியில், வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டிருந்த மையத் திற்குள் புகுந்து, வினாத்தாளை உருவிச்சென்றனர்.இதை மனதில்கொண்டு, வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எளிதில், யாரும் உள்ளே நுழையாதபடி, அதிகாரிகள் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது குளறுபடி நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதிகாரிகள் உஷாராக உள்ளனர்.பறக்கும் படை: தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க, 4,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுக்களை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அமைத்துள்ளார். இதில், கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மாணவர்களே உஷார்: தேர்வு முறைகேடுகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த, தேர்வுத்துறை ஆண்டுதோறும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனினும், முறைகேட்டில் சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 தேர்வில் 290 மாணவர்கள், பல்வேறு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு தேர்வுத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத் தாளை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள்களை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடும் குற்றங்களாக கருதப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்றும், தேர்வுத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். நாளை துவங்கும் தேர்வுகள், 22ம் தேதி வரை நடக்கிறது.
"ஷூ'வுடன் செல்லலாமா?
சில தினங்களுக்கு முன் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறும்போது, "தேர்வு மையத்திற்குள், "ஷூ, பெல்ட், சாக்ஸ்' போன்றவற்றை போட்டுக் கொண்டு செல்வதில் தவறில்லை; மாணவர்கள், "ஷூ' போட்டுக் கொண்டு செல்லலாம்' என்றார்.ஆனால், தேர்வு விதிமுறை புத்தகத்தில், மேற்கூறிய எதற்குமே அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தேர்வுத்துறை இறுதியான முடிவை அறிவிக்க வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், நாளை தேர்வு துவங்கும் நிலையில் கூட, இறுதி முடிவை தேர்வுத்துறை இயக்குனர் அறிவிக்கவில்லை.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறும்போது,"தேர்வு விதிமுறையில், "ஷூ, பெல்ட்' போன்றவற்றை போட்டுக் கொண்டு செல்ல தடை இருப்பது உண்மை தான். ஆனால், அது பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட உத்தரவு. தற்போது, யாரும் அந்த விதிமுறையை கண்டுகொள்வதில்லை' என்றார்."மாணவர்கள், "ஷூ'வுடன் செல்லலாமா, கூடாதா?' என்று கேட்டால், "செல்லலாம் தவறில்லை' என்றார்.ஆனால், விதிமுறையை காரணம் காட்டி பல தேர்வு மையங்களில், காலணிகளை வெளியே விட அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். தேர்வுத்துறை தீர்க்கமான முடிவு எடுக்காததால், சில மையங்களில் மாணவர்களை, "ஷூ'க்களுடன் அனுமதிப்பதும், சில மையங்களில் மறுப்பதும் போன்ற காட்சிகள் அரங்கேறும்.