ராஜபக்சவை சந்தித்தார்: நிருபமா ராவ்

Front page news and headlines todayகொழும்பு: இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபக்சவை நேற்று சந்தித்தார். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, அவரிடம் உறுதியளித்தார்.

இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சவுக்கு, நிருபமா ராவ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, அப்போது நிருபமா ராவ் உறுதியளித்ததாகவும் இலங்கையின் வடக்கு பகுதியில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், கச்சத்தீவில் நடந்த திருவிழாவில் 3,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளதன் மூலம் இரு நாட்டு மக்களும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். மீனவர் பிரச்னை, திரிகோணமலை மின் திட்டம், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டிவி' கோபுரம் சீரமைப்பு:
இலங்கை, முல்லைத் தீவில் ”கோகாவில்” என்ற இடத்தில், "டிவி' ஒளிபரப்புக்காக கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தபோது, இந்த கோபுரத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில், கோபுரம் பலத்த சேதமடைந்தது. தற்போது, புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணியில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீரமைப்புப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. ராணுவமும் இதற்கான உதவிகளை செய்து வருகிறது. இந்த கோபுரம் செயல் படத்துவங்கினால், முல்லைத் தீவில் வசிக்கும் பொதுமக்கள், "டிவி' ஒளிபரப்பை மீண்டும் காண முடியும்.

பொன்சேகா திடீர் உண்ணாவிரதம்:
ராஜபக்ச அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, தற்போது இலங்கை கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் தனது மகள்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தை பொன்சேகா துவங்கியுள்ளார். இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த அவரது மனைவி அனோமா, ”கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, உண்ணாவிரத போராட்டத்தை பொன் சேகா தொடர்வார்” என்றார்.