நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் விவகாரம்: நிபுணர் குழு அறிக்கை

புது தில்லி: 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல்களையும், இது தொடர்பான டாண்டன் கமிட்டி பரிந்துரைகளையும் இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு திங்கள் கிழமை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தாங்கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ஏப்ரல் 13-ம் தேதி வரை நீடிக்கும் என நீதிபதிகள் கூறினர். மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகார ரத்து முடிவால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களது தரப்பில் விளக்கம் கொடுக்க 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே இருப்பதாகவும் மத்திய அரசு அதைச் செய்ய முடியாது எனவும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 44 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது என்ற மத்திய அரசின் முடிவு செல்லுபடி ஆகுமா என்பதை பரிசீலிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தங்களது தரப்பில் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதை மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பாக மறு ஆய்வுக்குழுவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

"மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், நாட்டில் உள்ள 130 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் சார்பில் விளக்கம் அளித்தன. அதைத் தொடர்ந்து மறு ஆய்வுக்குழு இப்பல்கலைக்கழகங்களில் திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வு செய்தது. அதில் 44 பல்கலைக்கழகங்களில் போதுமான வசதிகள் இல்லாதது தெரியவந்தது' என மத்திய அரசு கூறியது.

இந்த பல்கலைக்கழகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாகவும், கல்வித்தரம், ஆசிரியர்களின் தகுதி, ஆய்வு படிப்புகளுக்கான வசதிகள் போன்றவை இந்த பல்கலைக்கழகங்களில் போதுமான அளவு இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்தது.