இலங்கை கூறிய புகாருக்கு இந்தியா மறுப்பு !

சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக சில இந்திய அதிகாரிகள் செயல்பட்டதாக இலங்கை கூறியுள்ள குற்றச்சாற்றை இந்தியா மறுத்துள்ளது.

இந்தியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பான 'ரா'வைச் சேர்ந்த சில அதிகாரிகள், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ச தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக இலங்கை தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.

இலஙகை வந்த இந்திய அயலுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியபோது,அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தபோது, அப்போதே நிருபமா ராவ் அதனை மறுத்திருந்தார்.

இருப்பினும், கொழும்பிலிருந்து வெளியாகும் " டெய்லி மிரர்" நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதே குற்றச்சாற்றை குணதிலக மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் இந்த குற்றச்சாற்றை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்கள் இடம் பேசசிய நிருபமா ராவ், 'ரா' போன்ற இந்தியாவின் எந்த நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயல்படவில்லை என தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும், இந்தியா எந்த ஒருநாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.