மேலும் ஒரு மாணவர் இன்று தற்கொலை: சூடுபிடிக்கும் தெலங்கானா

ஹைதராபாத்: தனித் தெலங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.டெக் இரண்டாமாண்டு பயின்று வரும் சாய் குமார் என்ற அந்த மாணவர், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவது தமக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் அறையில் தூக்கில் தொங்குவதை பார்த்த சக மாணவர்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து அம்மாணவனை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அம்மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவனின் இந்த தற்கொலை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை அப்பல்கலைக்கழகம் வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.