தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள்: முதல்வர் கருணாநிதி பெருமிதம்

 

சென்னை, மார்ச் 9: சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ச் சான்றோர்கள் ஆகியோருக்கு தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களை முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் பட்டியலிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 

"இந்திய திருநாட்டின் விடுதலையே உயிர் மூச்சு; சுதந்திரமே எனது தூய பிறப்புரிமை' என்று வீர முழக்கமிட்டு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஊற்றி வேள்வி வளர்த்து வெற்றி கண்ட தியாகச் செம்மல்களுக்கும், "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று தமிழுக்கு அணி செய்த ஆன்றோர்களுக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும், துறைதோறும் தொண்டாற்றி மக்களின் உள்ளங்களிலும், வரலாற்றிலும் இடம் பெற்ற மாசற்ற மாணிக்கங்களுக்கும் சென்னை முதல் குமரி வரை தி.மு.க. ஆட்சியில் திருவுருவச் சிலைகளும், மணி மண்டபங்களும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

எண்ணற்ற சின்னங்கள், எழுந்து உயர்ந்து நிற்கும் கட்டடங்கள் அனைத்தும் சரித்திரத்தின் சாகாக் குறியீடுகள். அவற்றை காணும்போதெல்லாம் உணர்வுகளில் உயர் மின்சக்தி பாய்ந்ததைப்போல் இனம் தெரியாத கிளர்ச்சி ஏற்படுகிறது. அந்தந்த வரலாற்றிலேயே வாழ்வதைப் போன்றதொரு பிரமை ஏற்படுகிறது.

 

அனைத்துச் சின்னங்களும் அரியவை. பெருமையும், பீடும் நிறைந்தவை. புகழ் மிக்கவை, வாழ்த்தி வணங்கத்தக்கவை. எனினும் அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

 

நெஞ்சையள்ளும் சிலம்பின் செழிப்பினை உணர்த்தும் பூம்புகார் கலைக்கூடம், இரு நூறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைக் குரல் எழுப்பிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் எழுப்பப்பட்ட கோட்டை, பாரதியின் பாட்டாக, பாரதிதாசன் கவிதையாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, திருநெல்வேலி மாவட்டம் நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலை, அறிவியல் வளர்ச்சியில் புதியதோர் அலையெனப் பொங்கி எழுந்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னேற சென்னை தரமணியில் "டைடல் பூங்கா' ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

 

சென்னையில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இனிதே நிறைவேறிவரும் இந்த நல்ல வேளையில் சிந்தனைகள் சிறகெடுத்துப் பறக்கின்றன.

 

எனது நினைவுகளில் பளிச்சிடும் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதில் உவகை கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.