
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
சென்னை, மார்ச் 9: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. எனினும், ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பான மனு மீது மத்திய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பள்ளி இறுதித் தேர்வுகள் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி திரைப்பட தயாரிப்பாளர் ஹென்றி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசிடம் மனு அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக அவர் மீண்டும் தாக்கல் செய்த மனு விவரம்:ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் 12-ம் தேதி முதல் ஏப்ரல் 25}ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதே நேரத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. 1.5 கோடி மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுத உள்ளனர். ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பால் அவர்கள் தேர்வுகளுக்கு தயாராவது பாதிக்கப்படும். எனவே, இந்தப் போட்டிகளை தள்ளிவைக்கக் கோரி மத்திய அரசிடமும், போட்டி நிர்வாகத்திடமும் நீதிமன்ற உத்தரவுப்படி மனு அளித்தேன்.
ஆனால், ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்; கோடிக்கணக்கில் பணம் புரளும் ஐ.பி.எல். போட்டிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் புதிய அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோக லே, நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தரப்பில் மூத்த வழக்கறிஞரும், அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ். ராமன் ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனு மீது மத்திய விளையாட்டு அமைச்சகம், மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.