நீ மட்டும் இன்னும் ஓயாமல்!!

தொலைத்தூர உறவுகளுக்கு
தொலைத்தொடர்பு மட்டுமே!!

காய்ந்துப் போன இதயத்திற்கு
ஈரமாய் உன் குரலோசை!!

கசிந்த கண்ணீருடன்
கனத்த மனதுடன்
படுக்கைக்கு சென்றால்
முத்மிடுவதென்னவோ மூட்டைப் பூச்சிதான்!!

தனிமைக்கு தீனிப் போட்டாலும்
தவறாமல் வந்துவிடும் உன் ஞாபகம்!!

நீ விரும்பியதெல்லாம் அனுப்பினாலும்
நான் மட்டும் வரமுடியாதவனாய்!!

மாதம் ஒரு முறை
உனக்கொரு கடிதம் ;
ஆச்சர்யமாகத்தான் உள்ளது
நீ மட்டும் பிழை சொல்லாமல் இருப்பது!!

தலைசாய்த்துக்கொள்ள
தலையணை மட்டுமே
உன் தோள்களுக்கு பதிலாக!!

காலம் வரும் ; காலம் வரும் என்று
காலங்கள் பல ஆகிவிட்டது - இப்போது
காலாவதியாகிவிட்டது என் வயது வரம்பு!

பாலையில் சிந்திய வியர்வை;
கண்ணீருடன் இப்போது;
மூட்டுவலிக்கும் முதுகு வலிக்கும்
நீ மருந்துக் கொடுக்கும் போது!!

ஓய்வெடுக்க வந்துவிட்டேன் நான்
நீ மட்டும் இன்னும் ஓயாமல்!!

                                                             - யாசர் அரஃபாத்