பாமகவினருக்கும் போலீசுக்கும் தகராறு: தடியடியில் அன்புமணி காயம் - கோ.க.மணி

பென்னாகரம் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் கார் இண்டூர் என்ற இடத்தில் சோதனைசாவடியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பாமகவினருக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசாரின் தடையடியில் பாமகவினர் காயம் அடைந்தனர்.

இது குறித்து பாமக தலைவர் கோ. க. மணி தருமபுரியில் அளித்த பேட்டி:

பிரச்சாரம் செய்வதற்காக தர்மபுரியில் இருந்து அன்புமணி காரில் வந்தார். அவரின் காரை இண்டூர் சோதனை சாவடியில் நிறுத்தினார்கள். அவரும் காரை சோதனை செய்து எங்களை அனுப்புங்கள் என கேட்டுக் கொண்டார். ஆனால் போலீசார் காரை சோதனை செய்யாமல் அன்புமணியைக் காக்க வைத்தார்கள்.

இது பற்றி கேள்விப்பட்டதும் நானும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் வந்தோம். அந்த நேரம் போலீஸ் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் போலீசார் வந்து எதுவும் பேசாமல் தடியடி நடத்தினார்கள்.

இதில் அன்புமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டார்கள். பா.ம.க.ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்பட ஏராளமானோர் இதில் காயம் அடைந்தார்கள்.

இது தொடர்பாக தேர்தல் பார்வையாளரிடம், நானும், முன்னாள் மத்திய அமைச்சர் வேலுவும் புகார் செய்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று மணி கூறினார்.