மகளிர் மசோதாவில் தலித், இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்: திருமாவளவன்

சென்னை, மார்ச் 10:  மகளிர் மசோதாவில் உள்ஒதுக்கீடு உடனே செய்யப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குரிய உள்ஒதுக்கீடு சட்டப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக மகளிர் மசோதா நீண்டகாலமாக நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அன்றைய பாஜக அரசும், இன்றைய காங்கிரஸ் அரசும் தயக்கம் காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை. 

மக்கள்தொகை அடிப்படையில் பெண்களுக்கு 50 விழுக்காடு வழங்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகப்பூர்வமானதாகும்.  ஆனால், 33 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அளிப்பது என்ற முடிவு மகளிருக்கான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது.  அத்துடன் அவ்வாறு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் தலித், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை என்பதும் ஜனநாயக விரோதப் போக்கேயாகும். 

13 ஆண்டுகளாக இம்மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் உள்ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை முழுமைப்படுத்தாத அரைகுறை நிலையில், இம்மசோதா மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது முழுமையான மனநிறைவை அளிக்கவில்லையென்றாலும் காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி, சட்டப்படி உரிமையாகப் பரிணாமம் பெற்றுள்ளது என்னும் அளவில் சற்று ஆறுதல் அளிக்கிறது.

முதலில் பொதுவான உரிமையை மீட்டு பின்னர் குறிப்பான உரிமையை வென்றெடுப்போம் என்னும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இடஒதுக்கீட்டையே ஏற்றுக்கொள்ளாத ஆதிக்கச் சக்திகளிடமிருந்து இடஒதுக்கீடு என்னும் அந்த உரிமையை வென்றெடுப்பது முதற்கட்ட வெற்றியேயாகும். அத்தகைய உரிமையை நிலைநாட்டிய பிறகு உள்ஒதுக்கீடு என்னும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவதுதான் இப்போதைக்கு நாம் கையாள வேண்டிய அணுகுமுறையாக உள்ளது. 

ஆகவே, இடஒதுக்கீடு இப்போதே வேண்டும்! உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்! என்னும் கோரிக்கை முழக்கமே நமது அணுகுமுறையாக அமைய வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.