மராத்தி மொழி சேவை வழங்காத செல்போன் நிறுவனங்கள் மீது தாக்குதல்

மும்பை: ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மராத்தி மொழி சேவை வழங்காத தனியார் செல்போன் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல தனியார் செல்போன் சேவை நிறுவனத்தின் விற்பனை மையம் மீது நேற்று மதியம் திடீரென ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த கடையின் நுழைவாயில் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் செல்லும் முன்னர் மகாராஷ்டி நவநிர்மாண் கட்சிக் கொடியை வீசிவிட்டுச் சென்றதாகவும் அந்த கடையின் ஊழியரான சபீனா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஹ்ர் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் செல்போன் சேவை மையத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

குறிப்பிட்ட அந்த இரு செல்போன் நிறுவனங்களின் சேவையில் ஒலிபரப்பாகும் பதிவு செய்யப்பட்ட குரல் பதிலில் மராத்தி மொழி இல்லை என்று ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இத்தகைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, அந்த இரு செல்போன் சேவை நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளருக்கான பதிவு செய்யப்பட்ட குரல் பதில் சேவையில் மராத்தி மொழியை சேர்த்துவிட்டதாக மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சிக்கு கடிதம் எழுதியுள்ளன.