
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுடெல்லி : மகளிர் மசோதா, மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாளை நடைபெறும் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆதரித்து 186 பேர் வாக்களித்தனர். ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்த்து வாக்களித்தார். மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்து ரகளையில் ஈடுபட்ட சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகளைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். ஐ.மு. கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டது. எனினும் பா.ஜ., இடதுசாரிகள் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எளிதாக கிடைத்து விட்டது. இனி மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் எதிர்ப்பாளர் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் அவர்களை வெளியேற்றுவது எளிதாக இருந்தது.
மக்களவையில் மசோதாவை எதிர்க்கும் சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு 40க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவினர் மசோதாவை ஆதரித்தாலும் 30க்கும் அதிகமான உறுப்பினர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டும்.இது தவிர, லாலு பிரசாத், முலாயம் சிங், சரத் யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் மக்களவையில் இருப்பதால் இவர்களை சபையில் இருந்து வெளியேற்றுவது எளிதாக இருக்காது என்று கருதப்படுகிறது. மக்களவையின் மொத்த பலமான 543ல் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 362 பேர் ஆதரவு தேவை. ஐ.மு. கூட்டணியின் பலம் 262. பா.ஜ. இடதுசாரிகள் மற்றும் பிற ஆதரவுக் கட்சிகளை சேர்த்தால் 362 எண்ணிக்கை எளிதாக கிடைத்துவிடும். என்றா லும் மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்வதில் அரசு கவனத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளது.மக்களவையில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்வது பற்றி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி டெல்லியில் நேற்று கூறுகையில், மார்ச் 15 அல்லது 16ம் தேதி மக்களவையில் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படக் கூடும். வெள்ளிக்கிழமை அலுவல் ஆய்வுக்குழு கூடும்போது இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மாநிலங்களவையில் நடந்தது போன்ற சம்பவத்தை நாங்கள் விரும்பவில்லை. நிதி மசோதா, மற்றும் அவசரச் சட்டத்துக்கு மாற்றுச் சட்டம் கொண்டு வருவது போன்ற முக்கிய பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது என்றார்.
மே 7ம் தேதி?: இதற்கிடையில் மக்களவையின் முதல் கட்ட பட்ஜெட் தொடர் கூட்டம் 16ம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்டக் கூட்டம் ஏப்ரல் 12ம் தேதி தொடங்குகி றது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பி.கே. பன்சால் கூறும்போது, பெண்கள் மசோதாவினால் கோபம் அடைந்துள்ள அனைவரையும் நாங்கள் சமாதானப்படுத்த வேண்டியுள்ளது. சுமூகமான நிலையை ஏற்படுத்திய பிறகுதான் மக்களவையில் தாக்கல் செய்வோம். மாநிலங்களவையில் நடந்ததைப் போன்ற சம்பவம் மக்களவையில் நடப்பதை விரும்பவில்லை. நிதி மசோதா உட்பட பல்வேறு அவசரப் பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான மே 7ம் தேதி அன்று பெண்கள் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்றார். எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டதற்கு இந்த விஷயத்தில் யார் மீதும் வெறுப்பு கிடையாது. அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.மக்களவையில் பெண்கள் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு 28 மாநில சட்டப் பேரவைகளில் குறைந்தது 14 மாநில சட்டப் பேரவைகளிலாவது இதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு இந்த சட்டம் ஜனாதிபதியின் கையெழுத்துக்காக அனுப்பப்படும். இந்த நடைமுறை முடிவடைவதற்கு ஒரு ஆண்டு ஆகிவிடும். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.