பிரபல கொள்ளையன் காதலியுடன் தற்கொலை

தென் மாவட்டங்களை கலக்கிய பிரபல கொள்ளையன், கள்ளக்காதலியுடன் பழநி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜ் என்ற சக்திவேல் (42). நெல்லை, நாசரேத், சுரண்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுபுகுந்து கொள்ளையடித்தும், வழிப்பறியில் ஈடுபட்டும் வந்தார்.

தென் மாவட்டங்களை கலக்கிய சக்திவேல் மீது நெல்லை கோர்ட்டில் மட்டும் 20&க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சக்திவேலுவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து உல்லாசமாக இருந்து வந்தார்.

தற்போது சீவலப்பேரியை சேர்ந்த பேச்சியம்மாள் (30) என்ற கள்ளக்காதலியுடன் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் குடும்பம் நடத்தி வந்தார். சமீபத்தில் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது 75 பவுன் நகையை ரோட்டில் வீசிவிட்டு இருவரும் தப்பிவிட்டனர். நகையை கைப்பற்றிய போலீசார், சக்திவேலை தேடி வந்தனர்.

இந்நிலையில், பழநியில் உள்ள ஒரு லாட்ஜில் சக்திவேலும் பேச்சியம்மாளும் நேற்று மயங்கிக் கிடந்தனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களை ஊழியர்கள் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இதுகுறித்து பழநி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் பிடியில் சிக்காமல் தப்பி வந்த சக்திவேலை சுட்டுப் பிடிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதை தெரிந்து கொண்ட அவர், கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் தன்னை கண்டுபிடிக்காமல் இருக்க சக்திவேல் ஆயிரக்கணக்கில் செலவு செய்து முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இளமையான தோற்றத்துடன் உடலை வைத்துக் கொள்ள கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு முன்பு சக்திவேல், சீவலப்பேரி காவல் நிலையம் அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அவரை வேறு யாரோ என்று போலீசார் நினைத்துள்ளனர். சக்திவேல் வீட்டை காலி செய்து சென்ற பிறகே உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.