எங்கே போகிறோம் நாம்‍‍-4

ஓர் இயக்கம் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நனவாக்கும் வரை நடைபோடும். அதன் லட்சியத்தை அடைந்தவுடன், அதுவரை அது மேற்கொண்ட பயணத்தின் வீரியமும் முடிந்துபோகும். விடுதலை வேள்வி வளர்த்தெடுக்கப்பட்டபோது, அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பது ஒன்றுதான் காங்கிரஸின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேறியதும், 'காங்கிரஸை கலைத்துவிட வேண்டும்!' என்றார் காந்தி. ஆனால், நேருவும், பட்டேலும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் காந்தி சொன்னதைக் காதில் வாங்கவில்லை. காலப்போக்கில் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்ற பெருமையிழந்து, அரசியல் ஆதாயம் தேடும் கட்சியாகச் சிறுமைப்பட்டுவிட்டது. கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த தலைவர்களின் லட்சியப் பாசறையாகப் பரிணமித்த பழைய காங்கிரஸ், பதவி தரும் சுகங்களுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்ட மலினமான மனிதர்களின் அதிகார வேட்டைக் களமாக இன்று இழிந்துவிட்டது. இன்றுள்ள காங்கிரஸில் மன்மோகன் சிங்குகள், ஏ.கே.அந்தோணிகள் மிகக் குறைவு. ஆனந்தமயமான திவாரிகளே அதிகம். இயக்கம் என்பது வழக்கமான ஒரு கட்சியானதுதான் இந்த இழிந்த நிலைக்குக் காரணம்.

தன்னலமற்ற தலைவர்களும், தொண்டர்களும் நிறைந்த இயக்கத்துக்கு ஒன்றே லட்சியம். ஆனால், பல தரப்பட்ட பண்புகள் கொண்ட மனிதர் கள் வடிவமைக்கும் கட்சிகளுக்குப் பல கொள்கைகள் இருக்கும். 'இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமவுரிமையும், சமவாய்ப்பும் இருக்கவேண்டும். எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளர்ச்சியடைவதற்கு முழுமையான வாய்ப்பு

வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரதேசமும் அதன் வாழ்க்கையையும், கலாசாரத்தையும் விருத்தி செய்வதற்கு வேண்டிய சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நோக்கம் சாத்தியப்படுவதற்கு மொழிவாரியாகவும், கலாசார அடிப்படையிலும் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும். சமூகநீதிக்கும், சம அந்தஸ்துக்கும் குறுக்கே நிற்கும் தடைகள் அகற்றப் பட வேண்டும். இவையே காங்கிரஸின் கொள்கைகள்' என்று அக்கட்சி 1946-ல் தேர்தல் அறிக்கையில் தெளிவு படுத்தியது.

'அடிப்படை ஜீவாதார உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் மூலம் சுதந்திர ஜனநாயக அரசு அமைய வேண்டும். சட்டமன்றங்கள், மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்கும் அதிகபட்ச சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். மாநிலங்கள் விட்டுத்தரும் குறைந்த அதிகாரத்தையே மத்திய சமஷ்டி அரசு ஏற்கவேண்டும். இந்தியக் கூட் டாட்சியில், விருப்பத்தின் அடிப்படையில் பல்வேறு பிரதேசங்கள் இணைந்து யூனியனாகச் செயல்படலாம்' என்று முதலில் கொள்கை வகுத்த காங்கிரஸ், பின்பு முற்றிலும் முரணாகச் செயல்படத் தொடங்கியது. இன்றைய காங்கிரஸ், மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், மத்தியில் அதிகாரங்களை அளவுக்கு மேல் குவிப்பதிலும் திட்டமிட்டுச் செயல்படுகிறது. பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து உயிர்நீக்கும் வரை அது மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க முன்வரவில்லை. 'கால மாற்றத்துக்கேற்ப கோலம் மாறும். கோலமாற்றத்துக்குத் தக்கபடி கொள்கை மாறும்' என்பதுதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ள ஒரே இலக்கணம். கொள்கை மாற்றங்களில் திராவிடக் கட்சிகளின் சாதனைகளை மிஞ்ச இந்தியாவில் வேறெந்தக் கட்சியாலும் இயலாது!

வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பொதுவாழ்வில் அடியெ டுத்து வைத்த பெரியார், காங்கிரஸில் இணைந்து அதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்து, தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றியவர். சமூக நீதிக் கான சரியான கருவியாக அந்த இயக்கம் செயற்படாத நிலையில் அதிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டவர் அவர். 'காந்தி ஒழிய வேண்டும் , காங்கிரஸ் ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும்' என்று ஓயாமல் குரல் கொடுத்த பெரியார், திருவாரூரில் 1940-ல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், 'திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு, பாது காக்கப்படுவதற்குத் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேரடிப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது' என்று பிரகடனம் செய்தார். அந்தத் தீர்மானத்தை விரிவாக விளக்கி 'திராவிட நாடு' கொள்கையை வலியுறுத்தி அன்று வழிமொழிந்து பேசியவர் பெரியாரின் படைத்தளபதி அண்ணா.

சேலத்தில் 1944-ல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் 'அண்ணாதுரை தீர்மானம்' அரங்கேறியது. ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்த போக்குக்கு, பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கும் தொனியில் அந்தத் தீர்மானம் அமைந்தது. வெள்ளையர் தந்த கௌரவப் பட்டங்கள் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 'திராவிடர் கழகம்' என்று புதிய பெயர் அன்றுதான் சூட்டப்பட்டது. 'திராவிட நாடும், திராவிட நாட்டு மக்களும், திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் சுரண்டல்களிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும்' என்று முழங்கப்பட்டது.

பெரியாரின் தன்னலமற்ற பொதுவாழ்வு முற்றாகத் தேர்தலைப் புறக்கணித்து, ஆட்சியதிகாரத்தை விட்டு விலகி நின்றது. ஆனால், அண்ணா 1935-ல் சென்னை நகராட்சி உறுப்பினர் தேர்தலில் நின்று தோற்றவர். தேர்தல் அரசியலில் அவருக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இருந்ததால், பெரியாரின் பாசறையில் இருந்து விடுபடுவதற்கான காலத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே காலமும் கனிந்து கைகொடுத்தது.

'நாணயஸ்தர்கள் என்றும், இயக்கத்தினரிடமும் என்னிடமும் உண்மையான பற்றுடையவர்கள் என்றும் நான் நம்பின தோழர்கள் பலர் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை மோசம் செய்துவிட்டதைக் கண்டும், கண்டுபிடித்தும் வருகிறேன். சிலர் இன்னமும் என்னை மோசம் செய்துவருவதாக ஐயம் கொண்டும், உறுதி கொண்டும் வருகிறேன்' என்று அறிவித்த பெரியார், தன் வாரிசாக நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தத்தெடுக்க முடிவு செய்தார். ஆறாண்டுகளுக்கு மேல் தனது அணுக்கத் தொண்டராக இருந்து, தனது நலனில் நாட்டம் காட்டிய மணியம்மையை வாரிசாக்க விரும்பினார் பெரியார். அந்நாளில் இந்து சட்டப்படி ஒரு பெண்ணை வாரிசாகத் தேர்ந்தெடுக்க இயலாது என்பதனால் மணியம்மையை, பெரியார் மனைவியாக்கிக் கொண்டார். அதற்கு முன்பு திருவண்ணாமலையில் பாதாள லிங்க கோயிலைத் திறந்து வைக்க வந்த இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியைத் தேடிச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார் பெரியார்.

திருமணம் பதிவு செய்யப்பட்டபோது பெரியாருக்கு 70 வயது. மணியம்மைக்கு 31 வயது. உடல் இச்சைக்காகப் பெரியார் மணியம்மையின் கரம் பிடிக்கவில்லை. ஆனால், தனிக்கட்சி தொடங்க ஆர்வத்துடன் காத்திருந்த அண்ணா, இந்தப் பொருந்தாத திருமணத்தைப் பொருத்தமாகக் கையிலெடுத்தார். கண்ணீர்த் துளிகளோடு பெரியாரை விட்டுப் பிரிவதாக அண்ணா அறிவித்தார். பெரியார் என்ற ஆலமர நிழலில் பெரிதாக வளர முடியாது என்று உணர்ந்தவர்கள், அரசியல் ஆசையுடன் அண்ணாவைத் தொடர்ந்தனர். ராயபுரம் ராபின்சன் பூங்கா அருகில் கொட்டும் மழையில் 1949 செப்டம்பர் 17-ம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் மலர்ந்தது. எந்தக் கொள்கை வேறுபாடும் இல்லாமல் ஒரு தலைவரின் தனிவாழ்க்கையை விமர்சனத் துக்குள்ளாக்கி, அரசியலரங்கில் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் ஒரே கொள்கைக்காக இயங்கும் 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்றார் அண்ணா. வாக்குகளைப் பெறும் நோக்கமில்லாத பெரியார் எதற்காக வும் தனது கொள்கைகளில் இறக்கும் நாள் வரை சமரசம் கொள்ளவில்லை. ஆனால், ஆட்சி நாற்காலியின் மூலமே நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்த அண்ணா, பாமர மக்களின் ஆதரவைப் பெறவும் படித்தவர்களைத் தன் பக்கம் திருப்பவும் பார்ப்பன சமூகத்தின் வெறுப்பைத் தணிவிக்கவும் சமரசங்களில் ஈடுபட்டார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை அண்ணாவிடம், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று உருமாறிப் போனது. பார்ப்பன எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று மென்மை காட்டியது. திராவிடர் கழகத்தில் பிராமணர்கள் உறுப்பினராக முடியாது. தி.மு.கழகத்தில் அது போன்ற தடையெதுவும் கிடையாது. இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடநாடு பிரிவினை மட்டும் தி.மு.க. மேடைகளில் கொள்கை முழக்கமானது.

'தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்பும் அனைவரும், இனிமேல் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு, இந்திய அரசின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பராமரிக்கத் தவற மாட்டோம் என்று உறுதிமொழி தரவேண்டும்' என்ற 16-வது சட்டத்திருத்தம் 1963 அக்டோபர் 5 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், 1963 நவம்பர் மூன்றாம் நாள் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக தி.மு.கழக சட்டதிட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என்றவர்கள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு ஒரேநாளில் தேசியவாதிகளானார்கள். இந்தி எதிர்ப்பு குறித்து, ஆட்சிக் கட்டிலை இழக்கும்போது மட்டும் மறவாமல் நினைவுபடுத்திக் கொள்வார்கள். 'காங்கிரஸ் எதிர்ப்பு' ஒன்றுதான் 1971 வரை தி.மு.க-வின் கைகழுவப்படாத கொள்கையாக இருந்து வந்தது. 'காங்கிரஸ் கட்சி பிர்லா கட்சி, டாட்டா கட்சி, முத்தய்யா செட்டியார் கட்சி, வடபாதிமங்கலம் கட்சி, காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்பு கட்சி, வடநாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி, காங்கிரஸ் கட்சி அடக்கு முறை ஒன்றையே நம்பி வாழ்கின்ற பண நாயகக் கட்சி' என்று எழுதிய அண்ணா தன் வாழ்காலம் வரை காங்கிரஸ் எதிர்ப் பாளராகவே இருந்தார்.

கலைஞர்தான் முதன் முதலில் 1971-ல் இந்திரா காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி அமைத்தார். 'அன்னை' இந்திராதான் 1976 ஜனவரியில் கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்து, ஸ்டாலின் முதல் சிட்டிபாபு வரையிலானவர்களை சிறையிலடைத்தார். மோகன்குமாரமங்கலத்தின் மூலம் எம்.ஜி.ஆரை பயன்படுத்தி 1972-ல் தி.மு.கழகத்தை உடைத்தவரும் இந்திரா காந்திதான். 'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யவேண்டும்' என்று ஐயன் வள்ளுவன் சொன்னதை நெஞ்சில் நிறுத்தி, அந்த இந்திராவை, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக' என்று 1980-ல் வரவேற்ற கலைஞர் இன்று காங்கிரஸ் தயவில் அதிகாரபீடத்தில் அமர்ந்திருப்பது காலத்தின் கோலமா? சந்தர்ப்பவாதமா? கொள்கையற்ற அரசியலா? பெரியாரிடமிருந்து அண்ணா வும், அந்த அண்ணாவிடமிருந்து சம்பத்தும், கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆரும், வைகோவும் பிரிந்து தனிக் கட்சி கண்டதற்கு எந்தக் கொள்கை வேற்றுமையோ, சித்தாந்தச் சிக்கலோ, தத்துவத் தகராறோ அடிப்படைக் காரணமில்லை. தமிழகத்தில் தி.மு.க. என்றும், அ.தி.மு.க. என்றும், ம.தி.மு.க. என்றும் மூன்று கட்சிக் கொடிகள் இன்று பறப்பதற்கும், அரசியல் ஆரோக்கியம் முற்றாக அழிந்ததற்கும் தனிநபர் பிணக்கும் பகையும், பூசலுமே காரணம். இந்திய அரசியலில் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு கொள்கை மட்டும் உண்டு. அது, (to grab power and share the loot) அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்... அதில் வரும் லாபத்தைப் பிரித்துக் கொள்வதும்...
நல்ல பொதுவுடைமைக் கொள்கை.