
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
காந்தி நகர் :மோடியின் வலதுகரமான அமித் ஷா கைது :போலி என்கவுன்டர் விசாரணை ஆரம்பம்
குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர் வழக்கில், நேற்று அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த விவகாரத்தில் பதவி விலகி, தலைமறைவான உள்துறை முன்னாள் இணை அமைச்சர் அமித் ஷா, சிபிஐ முன்பு நேற்று ஆஜரானார். அப்போது அவரை கைது செய்த சிபிஐ உடனே நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியது. அவர் உத்தரவுபடி நீதிமன்ற காவலில் அமித் ஷா வைக்கப்பட்டார். தற்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் சொராபுதீன். இவரை மாநில போலீசார் தேடி வந்தனர். குஜராத்தில் மறைந்திருப்பது தெரிந்தது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில போலீசார் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி என்கவுன்டரில் சொராபுதீனை சுட்டுக் கொன்றனர். இவரது மனைவி கவுசர் பீயும் பலியானார். வீட்டில் 40 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், நூற்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள், ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை குஜராத் மாநில போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது, ஒரே சாட்சியாக இருந்த துல்சிராம் பிரஜாபதி என்பவரும் மர்மமான முறையில் இறந்தார். அடுத்தடுத்து 3 பேர் கொல்லப்பட்டது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத் உள்துறை முன்னாள் இணை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்படிதான், சொராபுதீன், கவுசர் பீ, துல்சிராம் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு இப்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியது. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், அமித் ஷா, போலீஸ் உயரதிகாரிகள் சிலர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அமித் ஷா மீது கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல், குற்ற ஆதாரங்களை அழித்தல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜராக அமித் ஷாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சம்மன் அனுப்பினர். இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஷா மனு தாக்கல் செய்தார்; ஆனால், அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமித் ஷா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘பணக்காரர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலில் சொராபுதீன் இருந்துள்ளார். இந்த கும்பலை அமித் ஷா வழி நடத்தி உள்ளார்’ என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியை திடீரென ராஜினாமா செய்து முதல்வர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினார் ஷா. அதை மோடி ஏற்றுக் கொண்டு, ‘அமித் ஷா குற்றமற்றவர். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அகமதாபாத்தில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை அமித் ஷா வந்தார்.
அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். பின்னர் காந்தி நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்கள், கேமராமேன்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து சென்றார். அவருடன் பா.ஜ. நிர்வாகிகளும் சென்றனர். அதிகாரிகளிடம் சரண் அடைந்த அமித் ஷா, உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஓய்.தவே வீட்டுக்கு அதிகாரிகள் அவரை அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அமித் ஷாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அகமதாபாத் சபர்மதியில் உள்ள சிறையில் அமித் ஷா அடைக்கப்பட்டார். இதனால் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அமித் ஷா
காந்தி நகர்: சிபிஐ அலுவலகத்துக்கு நேற்று காலை அமித் ஷா சென்றார். அங்கு அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர். அலுவலகத்துக்குள் அமித் செல்ல அனுமதிக்கவில்லை. ‘‘உங்களை கைது செய்கிறோம்’’ என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு அமித் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதன்பின், சிபிஐ நீதிபதி ஏ.ஒய்.தவே வீட்டுக்கு அவரை அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். ஆனால், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், ‘‘இப்போதைக்கு அமித் ஷா சிபிஐ காவலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தேவைப்படும் போது அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்’’ என்றனர்.