
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெற்றால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீண்டும் கூறியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இதே பிரசாரத்தை அவர் மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு பிரசாரம் செய்த விஜயகாந்த், கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் மக்ளோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தே.மு.தி.க.வை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்து உள்ளன.
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் வீட்டு வரி, சொத்து வரி போன்ற வரிகளை மக்களிடம் வசூல் செய்கின்றனர். ஆனால் சாலை, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தே.மு.தி.க. வெற்றி பெற்றால் படித்த படிக்காத ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்த ஜாதிக்கட்சிகள் இன்று அந்த கட்சிகள் தேவையில்லை என்று கூறுகின்றன.
மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் ஒருவர், அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்து உள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை.
உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். இப்படி பிரச்சனை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்வேன். மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
| < முந்தைய | அடுத்த > |
|---|



















