
புதுடெல்லி, அக்.1:திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு வரும் 17ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சென்ற மே மாதம் 20ந் தேதி கைது செய்யப்பட்ட கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கனிமொழி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 16ந் தேதி மனுதாக்கல் செய்தார். அவருடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் இதனை வேறொரு தேதிக்கு தள்ளிவைக்கும்படி கனிமொழி வழக்கறிஞரும், சிபிஐ வழக்கறிஞரும் கேட்டுக் கொண்டதை அடுத்து வழக்கின் விசாரணை இம்மாதம் 17ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மற்றவர்களின் ஜாமீன் மனு நாளை மறுநாள் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் வரை ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜா உள்ளிட்டவர்கள் மீது நம்பிக்கை துரோகம் பிரிவின் கீழ் புதிய குற்றச்சாட்டுக்கள் தற்போது கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை புறக்கணிக்கப்போவதாக மாஜி திமுக மந்திரி ஆ.ராசா கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை சிபிஐ அறிவித்த விட்ட பிறகுதான் விசாரணையில் பங்கு பெறுவேன் என்று ராசா சார்பில் அவருடைய வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
| < முந்தைய | அடுத்த > |
|---|



















