
பெங்களூர், அக். 3: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் பெங்களூர் அணி 51 ரன்னில் சோமர்செட் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் முதல் வெற்றியை பெற்று அந்த அணி அதே வாய்ப்பில் உள்ளது. முதலில் விளையாடிய பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்(ரன்ரேட் 10.30) குவித்தது.
தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 4 பவுண்டரியுடன் 86 ரன்னும், வீராட் கோலி 22 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.தாமஸ் கிர்பே தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சோமர்செட் அணியில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 51 ரன்னில் வெற்றி பெற்றது. டிரெகோ 38 பந்தில் 58 ரன்னும், (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். வெட்டோரி, அரவிந்த் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஆட்டநாயகன் விருது பெற்ற கெய்ல் நிருபர்களிடம் கூறியதாவது: எனது இந்த அதிரடியான ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தொடக்கத்தில் துடுப்பெடுத்தாடுவது என்பது கடினமானதே. கிட்டத்தட்ட 18 ஓவர் வரை களத்தில் இருந்தேன். எனது பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
முதல் 2 ஆட்டத்தில் எங்கள் அணியில் எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் 50 ரன்னை தொடவில்லை. அடுத்த ஆட்டத்திலும் இது மாதிரி மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து சிறப்பான வெற்றியை பெற வேண்டும்.
பெங்களூர் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சோமர்செட் அணி முதல் தோல்வியை தழுவியது. பி பிரிவில் வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. வாரியர்ஸ் ரன்ரேட் +0.592 ஆகும். கொல்கத்தாவின் ரன்ரேட் +0.306 ஆகும். சவுத் அவுஸ்திரேலியா, சோமர் செட் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.
பெங்களூர் அணி 2 புள்ளியுடன் உள்ளன. கொல்கத்தா அணிக்கு மட்டும் லீக் ஆட்டம் முடிந்து விட்டது. இந்த பிரிவில் நாளை(5ந் திகதி) நடைபெறும் ஆட்டத்தில் வாரியர்ஸ்-சோமர்செட் அணிகளும், பெங்களூர்- சவுத் அவுஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றன.
| அடுத்த > |
|---|



















