முன்னாள் அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தொடர்ந்து ஜெயிலிலேயே இருந்து வந்தார்.
கடந்த 5.6.2011 அன்று திருவாரூர் தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விமர்ச்சித்து பேசியதாக அவர் மீது திருவாரூர் போலீசார் 3 பிரிவுகளில் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பொன்முடியை கைது செய்வதற்காக திருவாரூர் போலீசார் ஏற்கனவே 2 தடவை கடலூர் ஜெயிலுக்கு வந்தனர். ஆனால் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் இன்று திருவாரூர் டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், குருசாமி தலைமையில் 30 போலீசார் மீண்டும் கடலூர் வந்தனர். அவர்கள் ஜெயிலுக்கு சென்று அதகாரிகளை சந்தித்து பேசினார்கள். பின்னர் பொன்முடியை கைது செய்தனர். அவரை வேனில் ஏற்றி திருவாரூருக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பொன்முடி மீண்டும் கைது செய்யப்படப்போகும் தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையல் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கடலூர் ஜெயில் முன் குவிந்தனர். அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க கடலூர் போலீசார் 100 க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
| < முந்தைய | அடுத்த > |
|---|



















